பட்டாம்பூச்சி காதலன்

 பட்டாம்பூச்சி காதலன்



கதையின் சுருக்கம்.

வண்ண போர்வையில் கண்ணை கட்டியது போல், பட்டாம்பூச்சிகள் பறந்து திரியும் அழகு கொண்ட வண்ணத்தித் தோட்டத்தில் கலந்த ஒரு காவியம். வண்ணத்தின் வசியத்தால் சுரந்த காதல்ரசம், காமரசமாக மாறிய கவிஞனின் கதை. காதல் காத்திருப்பு நடத்திய நாடகத்தின் முடிவோ நாயகியை பலிகொடுத்த ஒரு இருளின் கதை.

கதையின் தொடக்கம்.

குயில்கள் கூவி, மயில்கள் ஆடி மரங்கள் அனுப்பிய கடிதமான தென்றல் தழுவும் தருணத்தில், செடிகள் சிலிர்த்து வளர்த்த மலர்கள், வெளியிட்ட மதுவின் வாடை வானம் எட்டியது. தேவதைகள் தான் வளர்த்த குழந்தைகளை பூமிக்கு அனுப்பி மலர்களின் மதுவை சூறையாடும் படி ஆணையிட்டனர். வண்ண மலர்களுக்கு போட்டியாய் கண்ணை கவரும் வண்ண சிறகுகளுடன் பூக்களோடு போரிடும் வண்ணத்துப்பூச்சிகளின் அழகை வாயால் வரையறுக்க முடியுமோ!. அழகுக்கு உருவம் கொடுத்தால் அது வண்ணத்தித் தோட்டம் தான் என உலகமே கூறும். 

கவிஞனின் தொடக்கம்.

அன்று ஒரு நாள் அழகை ரசிக்கும் கவிஞனின் காலடிகள் காட்டில் பட்டது. வசீகரிக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் அழகை காகிதங்களில் எழுதி வானம் எட்ட கோட்டை கட்டினான்.

காதலின் தொடக்கம்.

வண்ணத்துப் பூச்சியை பாடுவதினால் அவனை கவர்ந்தபடி ஆயிரம் மனங்கள் பறந்துகொண்டிருக்கும். அவனைக் கவர்ந்து பல மனங்கள் இருந்தாலும் அவன் மனம் கவர்ந்த காதல் வண்ணமோ காற்றை ரசித்து வனத்தில் பறந்து சிறகடித்துக் கொண்டிருக்கும். அவளை கவர நினைத்த கவிஞனோ அவளின் அழகை எழுதத் தொடங்கினான். இதனை அறிந்த அவளோ இவனை அறிய தொடங்கினாள். பல நாட்கள் காத்திருப்பில் கவிதைகள் காகிதங்களாக மாறி இறகுகள் முளைத்து இமயம் சென்றது. இவன் விரும்பி பார்த்த வண்ணமோ இவனைத் திரும்பிப் பார்த்தது. அன்று தான் அவள் உணர்கிறாள் அவன் அவனுடைய எழுத்துக்களை விட அழகானவன் என்று. இவளும் நம்ப தொடங்குகிறாள் அவள் அரசன் இவன் தான் என்று, இவள் புழு உடல் தளதளக்க, தன் கால்களோ பிடி இலக்க. பல மலர் வேட்டையில் தவறி விழுகிறாள். விழுந்தது தரையில் அல்ல, அவனுடைய காதலில். அவளைத் தேடி பல நாட்கள் பைத்தியமாய் தோட்டத்தை சுற்றினான். ஒரு நாள் கவிதை எழுதிய  களைப்பில் மயங்கிக் கிடந்தான். எழுதுகோல் பதித்த அவன் கையில் திருடி போல் தன் தேன் வடியும் சிறு வாயால் முத்தமிட்டு உயரப் பறந்தாள். எழுந்து பார்த்தபோது அவன் கையில் ஒட்டிய தேனை நக்கி அவன் புரிந்து கொண்டான், இது அவனுடைய காதல் ரசம் என்று. 

காமத்தின் தொடக்கம்.

அவளை தேடியபடி சுற்றித் திரிந்தான், அவள் மீது இருந்த காதல் அவனுக்கு வெறியாக மாறியது. அவளைக் கண்டு வெறிபிடித்து துரத்திய அவனை, அவள் தவறாக எண்ணி காதல் ஓட்டம் பிடித்தாள். அவன் நாவில் ஒட்டிய காதல் ரசம் கேட்டு காமரசம் ஆக மாறியது. அவளை காதலித்த அவன் மனம் அவளை அடைய வேண்டும் என்ற ஆசையை தூண்டியது. 

சோகத்தின் தொடக்கம்.

ஒரு நாள் அந்தி சாயும் நேரம் மூடிய பூவுக்கு முத்தமிட்டு அவனுடைய நினைப்பில் மயங்கிய அவளைக் கண்ட அவன், இதுதான் சரியான நேரம் என எண்ணி பதுங்கி, அவளை அடைந்து அவள் இறகை இறுக்கிப் பிடித்தான். அவள் சாயமோ அவன் கையில் சாய்ந்தது. அவள் நரம்புகள் வெடித்து தெரிந்தது. இறகு சிதைந்து இறந்து தரையில் விழுந்தாள். அவனை பிடித்த காமப் பேய் அத்தருணம் அவனை விட்டு பறந்தது.

 

ஏனோ தெரியவில்லை , 

மறுநாள் காலையில் 

தோட்டத்தில் சூரியன் பிறக்கவில்லை. 

அதனால், மலர்கள் பூக்கவில்லை . 

அதனால், தேனை தின்ன

பட்டாம்பூச்சிகள் பறக்கவில்லை.

தரையில் விழுந்த அவளை

காய்ந்த இலைகள் மூடியது.

அவள் காதலும் அவளுடனே புதைந்தது.

அவன் எழுதுகோல் தரையில் விழுந்தது,

அவன் கால்களோ கண்ணிருடன்

இருளை நோக்கி நகர்ந்தது.

--நன்றி--


(குறிப்பு: என் எழுத்துகளில்  மாற்றம்  கொண்டு  வர  விரும்பினால் hellosanjayraja@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் Instagram, Facebook, Twitter  போன்ற இணைய தளத்திலும் தொடர்பு கொள்ளுங்கள்.)

| Instagram | Twitter | Facebook |

@urssanjayraja


Comments

Popular posts from this blog

இழப்பின் பிடியில்